அச்சமில்லை அச்சமில்லை

பண்டாரப் பாட்டு

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

    இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

    துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதிலும்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

    பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

    இச்சைகொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்ட போதிலும்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

    கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும்,

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

    நஞ்சைவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டுபோதிலும்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

    பச்சையூ நியைந்து வேற் படைகள் வந்த போதிலும்,

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

    உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதிலும்,

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

     -மகாகவி பாரதியார்

Comments