சின்னஞ் சிறு கிளியே !
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே !
ஓடி வருகையிலே - கண்ணம்மா !
உள்ளம் குளிரு தடி !
அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடி !
உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடி !
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடி !
கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடி !
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா !
உன்மத்த மகுதடி !
சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடி !
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடி !
உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடி !
எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?
சொல்லும் மழையிலே - கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடு வாய்
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்,
இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?
மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?
- மகாகவி பாரதியார்
Comments
Post a Comment