நிற்பதுவே... நடப்பதுவே...!
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ? - பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீரோ ?- வெறுங் காட்சிப் பிழைதானோ ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ ?- இந்த ஞாலமும் பொய்தானோ ?
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ ? - அங்குக் குணங்களும் பொய்களோ ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ ? - இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே- நித்தம் விதிதொடர்ந் திடுமோ ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்- இந்தக் காட்சி நித்தியமாம்.
-மகாகவி பாரதியார்
Comments
Post a Comment