பாயும் ஒளி நீ எனக்கு !

 



பாயும் ஒளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,

தேயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.

 வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

 தூயசுடர் வானொளியே ! சூறையமுதே ! கண்ணம்மா !


வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

 பூணும் வடம் நீ யெனக்கு, புது வைரம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி

மாணுடைய பேர ரசே ! வாழ்வு நிலையே ! கண்ணம்மா !


வான மழை நீ யெனக்கு, வண்ண மயில் நானுனக்கு;

பான மடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு;

ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்,

 ஊனமறு நல்லழகே ! ஊறு சுவையே ! கண்ணம்மா !


வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;

 பண்ணு சுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;

 எண்ணியெண்ணிப் பார்த்திடலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;

 கண்ணின் மணி போன்றவளே ! கட்டியமுதே !கண்ணம்மா !


வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

 பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;

 நேசமுள்ள வான்சுடரே ! நின்னழகை யேதுரைப்பேன் ?

ஆசை மதுவே ! கனியே ! அள்ளு சுவையே கண்ணம்மா !


காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;

 வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே !

நாதவடி வானவளே ! நல்லஉயிரே கண்ணம்மா !


 நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;

செல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே ! எங்கும் நிறை பொற்சுடரே !

முல்லைநிகர் புன்னகையாய் ! மோதுமின்பமே ! கண்ணம்மா !

- மகாகவி பாரதியார்

Comments