ஓடி விளையாடு பாப்பா...

 


ஓடி விளையாடு பாப்பா, -  நீ
 ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
 கூடி விளையாடு பாப்பா, - ஒரு
 குழந்தையை வையாதே பாப்பா.


 சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
 திரிந்து பறந்துவா பாப்பா,
 வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
 மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.


 கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.


பாலை பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.


 வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.


 காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு 
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு 
மாலை முழுதும் விளையாட்டு - என்று 
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.


பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு 
தீங்குவர மாட்டாது பாப்பா.


 பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.


துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.


சோம்பல் மிகக் கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.


 தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நாம் 
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.


சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா; 
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
 தினமும் புகழ்ந்திட டி பாப்பா.


 வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில் 
வாழும் குமரிமுனை பாப்பா,
 கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன் 
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.


வேத முடையதிந்த நாடு, - நல்ல 
வீரர் பிறந்த திந்த நாடு,
 சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத் 
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.


சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு 
நிறைய உடையவர்கள் மேலோர்.


 உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
 உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
 வாழும் முறைமையடி பாப்பா.

- மகாகவி பாரதியார்

Comments